செவ்வாய், 5 ஜூலை, 2011

அய்க்கூ கவிதைகள்

11.அணிகையில் அழுதாள்
அவிழ்க்கவும் அழுகிறாள்
குழந்தைப் புதிர்!.

12.படர்ந்திருக்கின்றன
ஏலக்காய்  எங்கும்
செவ்வெறும்புகள்


13.பிரபஞ்ச மீசை
மொழி முதுகெலும்பு
மௌனம்.

14.குப்பையில் உணவு
உறக்கம் தெருவில்
கோயில் மாடு.

15.இலையுதிர் மரம்
வயசுக்கு வந்தது
இலவம்பஞ்சு!






























16.தங்கமோதிரம்
அருவருக்கிறது
நைந்த நூல் சுற்று.

17.பாதையில் வானவில்
சிதறியது வண்டியடித்து
மண்ணெண்ணெய்.

18.நெடுஞ்சாலை மரங்கள்
நல்ல கா(ய்)ப்பு
விளம்பர அட்டைகள்.

19.கம்பந் தீவு தின்றே
களை கொத்துகிறான்
கொஞ்சம் மாதிரி மாணிக்கம்

20.ஆளானக் காலம்
நீந்துகின்றன,காற்றில்
சரக்கொன்றைப் பூக்கள்.






























21.இறந்த சிலந்தி வீடு
ஊஞ்சலாடுகிறது
ஆமணக்கு கிளை எறும்பு.

22.குட்டியாடோடு ஏசு
படுத்திருக்கிறார் வழியே   
தெருஓவியம்.

23.மழையே அமுதோ!
அமுதே மழையோ!
உயிர்க்கும் காய்ந்த மலை.

24.எருக்க மொட்டில்
விரல்கள் பதிய
பேசிக்கும் இசை.
       
25.எதிர்மாடியில்
பறிக்கும் சர்தாசி
தன் மகிழ மரம்.






























26.தங்கதொட்டில் குழந்தை
தாலாட்டுகிறாள்
பணிப் பெண்.

27.சாக்கடை ஏரி
பெருகும் சுவாரசியம்
பன்றி காதல்.

28.விட்டில்கள்
சிறகசைவில் இரை
மெழுகு விழி.

29.ஆடை இடுகிறாள்
முயல் பொம்மைக்கு,
வெறும்மேனி பாப்பா.

30.கிளை ஒடியும் சத்தம்
கேட்க வில்லை
வேர்கள் அழுகை.

























31.அணைத்தால் எரிகிறது
எரிந்தால் அணைகிறது
அற்புத இருள்.

32.அஞ்சு ரூவா கிளி சோசியம்
முடிந்த்து பேரம்
ஐந்நூறுக்கொரு பரிகாரம்.

33.விரும்பிய நிறமணிகிறாள்
தெரிகிறாள் நிதமொன்று
பர்தா மங்கை.

34.கத்துதலை நிறுத்த
கத்துவதைப் போட்டார்
குழந்தைக்கு ஊதி.

35.தலை போன தென்னை
தளைத்திருக்கிறது
குருவிக் குடும்பம்.




















36.மதிய உறக்கம்
வேட்டியில் விந்து
இளந் துறவி.

37.ஆபரண மூட்டை
கழுதையைச் சுண்டுகிறது
வழியோரப் புற்கள்.

38.ஐயா என்றால்
அறுபதாகிவிட்டது?என்கிறார்
வாலிபக் கவிஞர்.

39.யானை இளைப்பாற
தாங்காதோ?
முருங்கை நிழல்.

40.பீர்க்கம் பூவில்
தீனிக்கலையும் பூச்சிகள்
பாதிக்கிறது,இரசனை.




















41.புடலங்காய்
பார்க்க முடிவதில்லை
தொங்கும் கல்.

42.ஆ! நெல்லி
பறிக்கலையே யாரும்
ஓ! ஒடுவங்காய்.

43.பசுஞ்செடி
பாவமாயிருக்கிறது
ஒரு கிளை சருகு.

44.பாதாளக் கிணறு
மேயும் கோழி
பதற்றத்தில் கழுகு.

45.புழுக்கம்
உழைப்பு-ஒன்றோ!
வேர்வை.




















46.வேலையாள் இல்லை
 திண்டாட்டம்
 சாதியாள்.

47.வேட்டையாட வேண்டும்
மீன் பிடிக்க முன்
தூண்டில் புழு.

48.பூரா மூங்கிலும்
தருவதில்லை_ஒரு
புல்லாங்குழல்.

49.குனிந்து புடைத்தாள்
விரைந்து போனது
மனஅரிசி.

50.அழுகிறாள் ஆட்டுக்காரி
ஆறுதல் தந்த கணினி
மேடம் தற்கொலை.




















51.திரும்பி திரும்பிப்
பார்க்கிறாள்,புதிய
பாத்திரத்தில் முகம்.

52.பூங்காவில்
பொட்டல் காடு
நடைப்பாதை.

53.என்ன சொல்லும்?
காய் மரங்களில்
தொங்கும் செருப்பு.

54.தொலைவில் விளக்கு
பாதைக்கில்லை
வெளிச்சம்.

55.கூத்தாடி
ஒப்பனையில் வீடு
கட்சி அலுவகம்.




















56.துப்பினால் கூட
கூட்டம் வருகிறது
கிணற்றில் மீன்கள்.

57.உயிருள்ளது தீ
கண்டது எப்படி?
கேட்க இல்லை சமணர்.

58.கம்பம் எதிர்பட
கண்ணில் விழுகிறது
இறந்த மின் ஊழியர்.

59.அவ்வளவு லேசில்
கூடியதோ!பிடிபட
மரப் புன்னகை.

60.அவள் கன்னத்தில்
வானவில்
சோப்பு நுரைக்கு நன்றி.




















61.மாடு நுரை தள்ள
வேகமாய் நடக்கிறது
கரும்பு தின்னும் வேலை.

62.எந்த ஓவியக் காரிகையின்
தூரிகைச் சிந்தல்
அந்தி.

63.பபுல்கம் ஒட்டி
முதல்வகுப்பு பவுனா
பொத்தான்இல் குறை தீர்த்தாள்.

64.வசதியாவான் ஏழை
ஏழையாக வேண்டும்
மருத்துவம்.

65.பேராழி
தாங்க வில்லை
சிறுங்கல்.




















66.பெங்களூரில் வள்ளுவர்
குறள் பற்றோ!
சர்வக்ஞர் சிலை ஒப்பம்.

67.கரட்டடிவாரம்
மல்லிகைச் சுகந்தம்
நூணப் பூக்கள்.

68.பப்பாளி விதைகள்
பிதுக்கியடிக்கும் விளையாட்டு
குதூகலமாய் கைம்பெண்.

69.புதைக்குமோ! புசிக்குமோ!
இறந்த பிள்ளையோடு
செல்லும் தாய்ப் பூனை.

70.தூரம் ஆகிவிட்டால்
குளிர் காயும்
சூரியனை எறும்பும்.




















71.பன்னாடை விழுமோ!
காய்ந்த மட்டையில்
எலிக் குஞ்சுகள்.


72.தென்னிந்தியக் கல்லூரிகள்
விளம்பரத்தில் அரிது
திராவிடப் பெண்டிர்.

73.ஆறு நிரம்ப வெள்ளம்
அனல் வீசுது
துவைக்கல்.

74.எறும்புக் குழிகளைப் பெருக்கி
நீர் தெளித்தாள்,அத்தை
அரிசிமாக் கோலத்திற்கு.

75.கருந்திராட்சை நிலவில்
துயிலும் குறுஞ்சூரியன்
அவள் கோவம்.





















76.நகரச் சாலை
ஒற்றை குடை
காலணிக்காரன் கடை.

77.ஆறுதல் செய்ய
சிரிக்கும் கைம்பெண்
கரிமீசை சிறுமி.

78.திருவிழாவாய்
பள்ளிக்கூடம்
இன்ஸ்பெக்டர் வருகை.

79.சொடுக்கினாள்
கெக்கலிக்குது மழலை
அழைப்புமணி.

80.ஆணோ! பெண்ணோ!
வாழைக்கன்று
பரிகாரக் கல்யாணத்தில்.



















81.பிறந்த நாள் பரிசு
சினமூட்டியது
தோழன் சுணக்கம்.

82.பெண்டிர்க்கு அழகு
எதிர் பேசாமை
விளித்தாள் வாயாடி அத்தை.

83.மதுவிலக்கு கவியில்
தங்கம் வென்றான்
டாஸ்மார்க் ஊழியன்.

84.மீன் பிடித்த
திருநங்கையர் கைது
தடைசெய்த வலை.

85.ஓரப்பார்வை விட்டேன்
அஞ்சலக மேசையில்
பசைதோய்த்தவள் கைதடம்.




















86.தொடப்பக்குச்சி
திறவுகோலாச்சு
மண் உண்டியல்.

87.தைப் பனி
வெதுவெதுப்பில்-நீ
அமர்ந்த முக்காலி.

88.உப்பு கூடியும்
சப்பென்றே இருக்கு
உப்பளத் தொழில் ஊதியம்.

89.இருப்பார்களோ!
அன்னாடங்காச்சிகள்
அம்பானி ஊர்.

90.உமிழ்நீர் சுற்றி
எறும்புகள்
இனிப்பு நங்கையோ!




















91.வீட்டுக்காவலில்
கறையான்கள்
முற்றுகையிட்டது ஈசல்.

92.சூறை விளையாட்டு
சுக்குநூறானது
வரிக்குறமத்தாங்காய்.

93.ஓடைப்பக்கம்
கிள்ளும் மல்லிகை
சீத்தாப்பூக்கள்.

94.குழல் விளக்கு
பூச்சிகள் மரணக்கிடங்கு
தொங்கும் எண்ணெய்தாள்.

95.கிண்ணஎண்ணெய்
உருளும் பால்துளிகளில்
அம்மா விரல் வலி.






















96.களையெடுக்கும் மாதர்
குடிக்கின்றனர்
குளிர்ப்பானப் புட்டியில் கூழ்.

97.பூங்கா வழி
கோணலாய் போனது
காதலர் புத்தி.

98.முடியும் நேரமே
எப்போதும் வருகிறான்
சந்தைக்கு ஏழை.

99.ஊருக்குள் போக
இளையவளுக்குத் தயக்கம்
துருப்பிடித்த மிதிவண்டி.

100.கிராமத் தேநீர் கடை
வந்துவிடும் அன்றே
செய்தித்தாளில் பலகாரம்.



















101.பெருங்கவிஞர் வருகை
நெகிழ்ந்துப் பார்த்தேன்
காலி குறுஞ்செய்தி.

102.பனைமரம்
கழுத்துவரை மூழ்கியது
ஊணாங்கொடியில்.

103.லாரி மின்கலம் காட்டி
நகைத்தாள் மங்கை
தினம் NI  கவனி.

104.அதிகப்படும்
எடுபிடி அதிகாரம்
முதலாளி இல்லா நேரம்.

105.நூலக வாசல்
வரவேற்கிறது
தடதட மின் விசிறி.



















106.பண்டிதனுக்கும் சிரமம்
51ஆம் பக்கம் படிக்க
நூலக முத்திரை.

107.அலுவகக் கழிவறை
அவசரமாக வெளியேறினாள்
குறைந்தது தாய்ப் பால்.

108.ஆப்பிரிக்கப் பழங்குடிகளின்
புராதன ஓவியங்கள்
சாம்பார் தூள் பொட்டலத்தில்.

109.மண்ணெண்ணெய் விளக்கு
ஆயா எண்ணெய் சீசா
அப்பா மதுபுட்டிகள்.

110.எழுத்து கூடவே வந்தும்
பொருளிழந்து நிற்கிறது
எழுகோல் நிழல்.




















111.ஆடிக்கொண்டிருந்தது
எனக்கு முன்,
ஆழத்தில் விட்ட பந்து.

112.கனவு வெளியில்
காகிதப்பூக்கள்
ஊர்ந்து களைக்கும் வண்டு.

113.ரகசியம் சொன்னது
சன்னல் குஞ்சுகள்
பாட்டிகுருவி இருந்த மரம்.

114.தாம்பு மாடு
வாழ்க்கையோ!
தடாகத்தில் மீன்.

115.முஸ்தா பிள்ளை
அடம் பிடிக்கிறது
கிருஷ்ண வேடம்.




















116.வைரஸ் ஆயுதம்
கண்டும் வசப்பட வில்லை
வண்ணப்பருத்தி.

117.தேன் எடுத்த கை
குமட்டியது
பிய்யமர வாடை.

118.நேராகும்
சாலை
பிரியும் மலைகள்.

119.இசை அலைவரிசை
கேட்க வேதனை
நேரலை உரையாடல்.

120.உளுந்து தோல் விழியாள்
பேசினாள் நெருங்க
மிளகு மொழி.




















121.மின்சாரம் இல்லை
எச்சரிக்கை விடுக்கிறது.
குறை மின்கலம்.

122.தெரிகிறது வழி,
போக முடிய வில்லை
கண்ணாடிசன்னல் தும்பி.

123.தலை கழுவ
இன்றும் தொடர்கிறது
துணிசோப்பிடும் தந்தை.

124.முன்னிரவு மழை
தடங்கலானது
மாலைநேரக்கடை.

125.எளிய வாழ்வு பேச
ஆன்மீக அம்மா வந்தார்
58ஆயிரம் உருவா புடவையில்.




















126.சிரித்த குழந்தை
போதுமென்றது-இடறிய
கல் அடிக்கும் அம்மாவிடம்.

127.சமையல்காரன்
கைபக்குவம் காட்டியது
காய்கறி கட்டை.

128.ஒத்தையில் அவள்
எங்கும் சோடியாய்…
காலணி.

129.அலைப்பேசி பேச்சில்
சிலாகிக்கும் மழலை
காதில் ரிமோட் கண்ட்ரோல்.

130.ஊசியில் பிறப்பு
ஊசிப் போக வில்லை
தாயன்பு.




















131.எள்வயல் பூக்கள்
திரும்ப வைக்கிறது
அழுவுநாத்தி குரல்.

132.எலி கடித்த இளநீர்
தாகம் தணிக்குது
நிறைமாத அணில்.

133.அதுவும்
மகிழ்ச்சித் தருணமே!
என்னவள் ஏச்சு.

134.வாலாட்டியும்
பிரயோசனமில்லை
விலகாமல் மாட்டுத் தொணசி.

135.பிடித்தவர் கையொப்பமிட்ட
பரிசுநூல் கிடைத்தது
பழையபேப்பர் கடையில்.




















136.சமநிலை நெருங்க
பாடுபடுத்தும்
காய்ச்சல் நாக்கின் கசப்பு.

137.தண்டை நீரை
தட்டிவிளையாடும் குமரி
தணலாகும் மார்புநதி.

138.சவ்வுக் காயிதக் கூடாரம்
அகலாத நினைவில்
யானைக்கால் வாயாடி.

139.நுழையும் போதே
நிமிர வைக்கும்
அட்டைவீட்டு வெப்பம்.


140.விழுவதே இல்லை
ஆசாரி காதில்
குட்டைப்பென்சில்.




 














141.ஊர்ந்த சூடு
இறுகும் தாபம்
தனித்து கிடத்தல்.


142.வெயில் நாழிகையில்
மோதும் தென்றல்
இன்ப லேகியம்.

143.தேநீர்த் தூள் வாங்க
கூட்டிப் போனாள்,ரேணு
பனங்காய் வண்டி.


144.தையல்காரிக்கே
ஒரு வித அழகு
கழுத்தில் துணி டேப்


145.கட்டுதறியில் சோடியாய்
பண்ணைக்காரத் தாத்தாவின்
இருவேறு காலணி

கருத்துகள் இல்லை: